Kf;fpa mk;rq;fs;
1. மூச்சுப்பயிற்சி செய்து வலிமைப்படுத்திய குரல் தளராது நிலைத்திருக்கும். கழுத்தை மட்டும் சார்ந்து எழுப்பும் குரல் நாள்பட குரல்-வளத்தை இழக்கும். ஆரோக்யமாக இருக்க, ஆரோக்யமாகப் பாட, மூச்சுக்காற்றை சரிவரக் கையாள வேண்டும். இதை நன்கு சமனப்படுத்த நாபியிலிருந்து (மணிபூர சக்கரத்திலிருந்து) அதன் கீழ் உள்ள பகுதிகளின் உதவியோடு ஒலியை எழுப்பக் கற்றுக்கொள்ள வேண்டும். நாபியின் மேற் பகுதியை குரலுக்கு சாதகமாக உபயோகப்படுத்தத் தெரியவேண்டும். இதனை நன்குணர வீணையின் அமைப்பையும் அதற்கும் உடலுக்கும் உள்ள உறவையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வீணையோடு உறவாடிய குரலுக்கு வளமையும் இனிமையும் பெருகும். குரல் வளத்தோடு பாடும் பாட்டு, கச்சேரி செய்வதற்கு மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது. சுருதி சுத்தமாக மெட்ட மைக்கப்பட்ட வீணை பாடுபவரின் உடலானால் ஸ்வரஸ்தானங்கள் பாடகனின் உடலில் பதித்த மெட்டுக்கள்போலாகும். உணர்ச்சியையும் புத்தியையும் மட்டும் சார்ந்த பாட்டு ஸ்திரத்தன்மை பெறாது. உடம்பைச் சார்ந்ததொரு பாட்டே பாடகனுக்கு நிலைக்கும் ஆரோக்யமான சொத்து. இக்காரணங்களினால், பாட்டைச் சார்ந்தது வீணை. வீணையைச் சார்ந்தது பாட்டு என்பது காமெட்டின் அடிப்படை அம்சம். இந்த அடிப்படை அம்சம் ‘சங்கீத மருந்து’ (music therapy) என்ற வகையில் உடல்-மன ஆரோக்கியம் குறைந்தவர்களுக்கும் பயனளிக்கிறது.
2. ‘காலம்’ என்பதுதான் எல்லாவற்றையும் கடந்து நிற்கும், நம்முள் நிறைந்து நிற்கும் ஒரு ‘வஸ்து’ என்ற தத்துவத்தை நமக்குப் பூர்ணமாக விளக்குகிறது. நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்கமுடியாத, உணரமுடியாத இத்தகைய ஒரு விஷயத்தை இசை தெளிவாக்க நம்மைத் தூண்டுகிறது, சுலபமாக உணரவைக்கிறது. ‘தாளம்’ என்றதொரு கட்டுப்பாட்டால், காலத்தை உணரவைக்கிறது கர்னாடக ஸ்ங்கீதம். ஸ்ருதி-ஸ்தானம்-லயம் என்ற மூன்றையும் விளையாட்டாக குழந்தைப் பருவத்திலேயே கற்பிக்க, விளங்க வைக்க, உணரவைக்க முடியும். இந்த அடிப்படை நிலை ‘காமெட்’ முறையின் முக்கிய அம்சம்.
3. இசை வடிவங்களைப் புரிந்து, தெரிந்து (pattern recognition), மனதுள்ளே அவைகளை நிறுத்தி ஒலியோடு இணைத்து உடம்பிலும் அதை உணர்ந்து (நாட்டியம்) கற்பனை செய்யும் திறன் இப்பயிற்சி முறையால் இளம் பருவத்திலேயே வந்துவிடும். அதை சாதக பலத்தினால் வளர்த்துவிடும் இம்முறை. இது கலைகளை ஒன்றிணைக்கும் ‘காமெட்’ முறையின் ஓர் முக்கிய அம்சம்.
4. பாட்டுக்களை எழுத்து (notation) மூலம் வெளிப்படுத்தும் திறமைகளையும் படிப்படியாக வளர்க்கவும் இம்முறையில் உத்திகள் விஞ்ஞான அடிப்படையில் அமைத்திருப்பது மற்றொரு முக்கிய அம்சமாகும்.
5. ‘நாதமே யோகம்’ என்பது இம்முறையின் அடிப்படைக் கொள்கை. மனதையும் புத்தியையும் உடம்பையும் ஒன்றை ஒன்று தழுவி நிற்க, சம நிலைக்குக் கொண்டுவரப் பயிற்சிகள் அடங்கியதொரு முறை இது. இது கற்பனைத் திறனை வளர்க்கும் இன்னுமொரு முக்கியமான அம்சம்.
6. ஒலிகளின் பரிணாமங்களையும், ஸ்ருதிகளின் நுணுக்கங்களையும், உணர்வுகளைத் தழுவிய ‘கமக’ அசைவுகளின் நுட்பங்களை இரு வேறு நிலைகளில் (ஸ்வரம், ஸ்வரஸ்தானம்) துல்லியமாகக் கேட்பதற்கும், அறிந்து கொள்வதற்கும், பாட்டின் முழு வடிவத்தை ஒவ்வொரு அங்கமாக அறியவும், உணரவும், இவ்வணுகு முறை சிறு வயதிலிருந்தே மாணாக்கர்களைத் தயார்ப்படுத்துகிறது.
7. ஜதிகளைப் (rhythms) புரிந்து கொள்ளும், உணரும் முறையால், இசை, நாட்டியத்திற்குமல்லாமல் மொழிக்கும், தன்னுள் ஒளிந்திருக்கும் ஒரு கவிஞனை வெளிக்கொணர்வதற்கும் உதவுவது இப்பயிற்சிமுறையின் இன்னொரு முக்கிய அம்சம்.
8. பாட்டுக்களைத் தெளிவாக, நன்கு புரிந்து பாடவும், வாசிக்கவும் வேண்டிய அம்சங்கள் அனைத்தும் இப்பயிற்சி முறையில் அடங்கும். இதனால் மாணாக்கர்கள் சேர்ந்து ஒன்றாகப் பாடவும் வாசிக்கவும் உதவி செய்கிறது.
9. எந்தப் பாட்டையும் தானாகவே நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் திறமையை வளர்க்கும் இம்முறை.
10. தான் தெரிந்துகொண்டவைகளையும், கற்றுக்கொண்டவைகளையும் சரியாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் திறமை சிறு வயதிலேயே உண்டாகிவிடும். கற்கும்பொழுதே தன்னுள் ஒரு நல்லதோர் ஆசிரியனையும் படைக்கிறது இவ்வழி.
11. பொதுவாக கலைகளோடும் கலாசாரங்களோடும் இணந்து செயல்படும் கலைத்திறமையை சில வருடங்களிலேயே தன்னுள் வளர்த்து விடும் இம்முறை.
12. இவ்வனைத்தையும் நன்றாகவும் எளிதிலும் கற்க, அடிப்படயிலிருந்தே ப்ரத்யேகமான soft technology யின் துணையோடு பயிற்சிகள் அமைத்திருப்பதும் COMET முறையின் வெகு முக்கியமான அம்சமாகும்.