tPiz ehjk; clk;ig xl;b
குரல்போல வீணையின் நாதமும் வீணையை ஒட்டியே அமைகிறது. அதன் மரம் வளரும் இடத்திற்குத் தகுந்த மாதிரி, மரத்திற்குத் தகுந்த மாதிரி, மரத்தின் உருவத்திற்குத் தகுந்த மாதிரி, வீணையின் நாதம் மாறுபடும். முற்காலத்தில் ‘வாணா’ என்று காற்று வாத்தியங்களுக்குச் சொல்வார்களாம்! இப்பொழுது ‘வீணா அல்லது வீணை’ என்றால் குடம், தண்டி, குடுக்கை, கோவில்களின் மேல் அமைக்கப்பட்ட யாழி, ஏழு தந்திகள், 7 பிருடைகள், 24 மெட்டுக்கள், கொண்ட தந்தி வாத்தியத்திற்குப் பெயர். இந்த விஷயங்களைக் கொண்டதொரு இயற்கையான வாத்தியத்திற்குப் பெயர்கள் மாறலாம். குணங்கள் மாறாது. மொழி மாறலாம், பொருள் மாறாது; நிறம் மாறலாம், குணம் மாறாது என்பது போல. ஆனால் வீணை உருவத்தில் ஓர் இசைக்கருவியின் மரத்தில் ஒரு electric contact mic பொருத்தி வாசித்தால் வரும் நாதம், குணம், வீணையுடையது அல்ல, electric guitar போன்றது. Magnetic contact mic ஆக இருந்தால் ஓர் அளவுக்கு வீணையை ஒட்டி இருக்கும். ஏனெனில் வீணையின் பலகையிலிருந்து தந்திகளால் எழுப்பப்படும் ஒலி அலைகளையே பெரிதுபடுத்தி நமக்குப் பெரிதாகக் கேட்கும்படி செய்கிறது contact mic. Electric contact mic தந்திகளின் ஒலி அலைகளை மட்டுமே பெரிது படுத்திக் காட்டுகிறது. மரத்தோடு இணைந்து வரும் நாதம் செடியிலிருந்து வீசும் பூவின் வாசனை போல. மேலை நாடுகளில் electric contact mic பொருத்திய guitar-க்கு electric guitar என்று சரியாகச் சொல்லுவர். Electric mic பொருத்தாமல் இருக்கும் guitar-க்கு acoustic guitar என்று கூறுவர். ஒரேமாதிரியான Electric mic இரண்டு வீணைகளில் பொருத்தினால் இரண்டும் ஒறே மாதிரியே ஒலிக்கும். ஆனால் இயற்கையான இரண்டு வீணைகளின் குணம் மாறுபடும், இரு மனிதர்களின் குரல் போல. Electric mic பொருத்தப்பட்ட வீணையின் நாதத்தில் வீணையின் தனித்தன்மையை இழக்கிறோம். அதற்கென்றதொரு ரஸனையையும் இழக்கிறோம். அதற்கான டெக்னிக்கை மாற்றியமைப்பதினால் நமக்குக் கிடைக்கும் ஸங்கீதம் சிலவழிகளில் மாறுபட்டு இருக்கும். இக்காரணங்களினாலேயே மேலை நாடுகளில் electric sound, acoustic sound என்ற வகையில் பிரித்து வைக்கிறார்கள்.
ஸரஸ்வதி வீணை என்று கூறுவது பொதுவாக தஞ்சாவூர், திருவனந்தபுரம் மைசூர், ஆந்திரா வீணைகளைக் குறித்துக் கூறுவதே. இதன் அமைப்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அது செய்திருக்கும் மரத்தினாலும் வேலைப்பாடுகளினாலுமே வித்தியாசப்படும். பலா மரத்தில் செய்த தஞ்சாவூர் வீணையின் நாதம் சிறப்பாக இருக்கும் என்று கூறுவது வழக்கம். திருவனந்தபுரம், மைசூர், ஆந்திரா வீணகளிலும் நல்ல வீணை நாதத்தைக் கேட்டிருக்கிறேன். நன்கு பக்குவப்படுத்தின வீணையும், நல்ல தந்திகளும், மெட்டுக்களும், மேல் ரேக்கு, தாள ரேக்கு முதலிய பாகங்கள் நல்லதாக இருந்தால், நல்ல வகையில் மேளம் செய்திருந்தால், நாதம் எந்த வீணையிலிருந்தும் நன்றாக வரும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஸ்ருதி சேர்ப்பதற்கு ஏதுவாக கிடார் கீ இப்போது போடுகிறார்கள். அது இருந்தால் பிருடை அவசியமில்லை. அழகுக்காகவே அதை வீணையிலிருந்து எடுக்காமல் வாசிக்க வேண்டி வருகிறது. பிருடைக்கு இருக்கும் முக்கியத்வத்தோடு, அழகோடு, அவசியத்தோடு இன்னும் ஒரு நல்ல கருவியை ஸ்ருதி சேர்ப்பதற்காகப் பொருத்தி, ஸ்ருதி சேர்ப்பதன் எளிமையைப் பெருக்கினால் என்ன என்று தோன்றியது. வயலின் வழியில் ஸ்ருதி சேர்க்கும் ஒரு கருவியை சுமார் 40 வருடங்களுக்கு முன் திரு பழனி ஆசாரி உதவியுடன் உண்டாக்கினேன். பின்னர் திரு கே.வி நாராயணஸ்வாமிக்கும், பாம்பே ஜெயஸ்ரீக்கும் இம்மாதிரியான தம்பூர் செய்து கொடுத்து உதவினேன். பின்னர் இன்னும் சில திருத்தங்களுடன், மாற்றங்களோடு. ‘பிருஹத்வனி நாகபாசம்’ என்ற பெயரில் அது உருவெடுத்தது. ஸ்ருதி எப்படிச் சேற்பது என்று தெரிந்துகொள்ள நினைப்பவருக்கு இது ஒரு வரப் பிரஸாதம்.
‘Packaged veenai’, ‘Collapsable veenai’ என்று சொல்லகூடிய வகையான சுலபமாக வெளியில் எடுத்துக் கொண்டு போகும்படியான வீணகள் இரண்டு மூன்று வகைகள் உண்டு. வீணையைப் பகுதிகளாகப் பிரித்து, package செய்து, பயணத்துக்கு வசதியாக்கி எடுத்துச் செல்லும் காலம் நிலவுகிறது இன்று. வீணை பிரபலமாகிறது என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் உண்மை எது? வீணையின் தெய்வீகத் தன்மைக்கு மதிப்புக் கொடுப்பவர் வீணை உடம்போடு சேர்ந்தது என்ற எண்ணத்தோடு வளர்ந்திருந்தார்கள். வீணை முதலில் ஓர் இசைக்கருவி என்ற எண்ணம் வலுக்கும் போது இசைக்கருவியின் தரமும் மற்ற வசதிகளும் வீணை வாசிப்பவர்களுக்கு முக்கியமாகிறது. மற்ற பண்பாட்டு எண்ணங்களைத் தள்ளி வைக்க முடிகிறது.
வீணை ஓர் இசைக்கருவியாகப் பாவித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது, சொல்லப்போனால், வெகுகாலம் தொட்டு, யாழ் வாசிக்கும் காலத்திலிருந்தே எனலாம். தஞ்சாவூர் மஹாராஜா ரகுநாத நாயகரின் மந்திரி, கோவிந்த தீக்ஷிதர் இப்போது இருக்கும் வீணையை அளித்தார் என்பது சரித்திரம். 19வது நூற்றாண்டில் மைசூர் மஹாராஜா, நெல்வாடி கிருஷ்ணராஜ வொடயார் (1895-1940) இசைக்கருவிகளை உண்டுபண்ண ஊக்குவித்தார். ஹுலுகூர் கிருஷ்ணாசார் என்பவர், பழைய காலத்து, துருவ, சல, விபஞ்சி, கச்சபி, பிராமி, நைசன்கி, சித்திர, தம்புரி, ரவுத்தி, என்ற 9 வித வீணைகளைளின் தத்துவங்களை இணைத்து, விஸ்வ வீணை என்ற பெயருடைய வீணையைச் செய்து, பின்னர், ‘கிருஷ்ணேந்திரபூப மேள வீணா’ என்ற பெயரொடு ராஜாவிற்கு ஸமர்ப்பித்தார். 1930 ல் பொப்பிலி வீணைமாதிரியானதொரு 23 தந்திகள் உள்ளதொரு வீணையை எஸ். எம். ஜெயராஜ்பிள்ளை என்பவர் வெல்லூரில் செய்திருக்கிறார். பெங்களூரில் எஸ். பத்மனாபராவ் என்றதொரு எஞ்சினியர் ‘ஸூபர் வீணை’ என்றதொரு வீணை செய்திருக்கிறார். மற்றொருவர் 1977ல் ‘திரிவேணி’ என்ற தொரு வீணையைப் படைத்திருந்திருந்தார். திரிவேணியிலிருந்து கொட்டு வாத்தியம், தம்பூரும் பிரித்தெடுக்கலாம்! “ஒன்றில் மூன்று” என்று என்னிடம் 1978ல் காண்பித்தார். இப்படி வெவ்வேறு வீணைகள் உண்டாக்கி இருந்தாலும், ஸ்ரஸ்வதி வீணையே இன்றும் கையாளப்படுகிறது சில சில மாற்றங்களோடு.
வீணையில் எல்லோரும் உபயோகப்படுத்தும்படியான அடிப்படையான அவசிய மாற்றங்கள் அதிகம் இச்ல்லை. மாற்றங்களுக்கான சில காரணங்கள்: 1. ஸ்ருதி சேர்ப்பதில், வாசிக்கும்போது தந்தி அடிக்கடி கலையாமல் இருப்பதில் பிரச்சினை. 2. வீணையை எடுத்துச் செல்வதில் பிரச்சினை 3. வீணையின் நாதத்தைக் கூட்டுவதற்கு உபயோகிக்கும் உத்திகள். 4. வீணை மெட்டுக்கள் தேய்ந்து போனால் புது மெட்டுக்கள் அதிக சிரமம் இல்லாமல் பொருத்துவதற்கு உத்திகள், இவ்வாறு சில.
வீணை செய்வதில் ஒரு முக்கிய பிரச்சனை, guitar, violin போன்ற வாத்தியங்களைப்போல standardization கிடையாது. ஆகையால் வீணையை நன்கு கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
வீணை கற்பிக்கும் ஆசிரியர் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுப்பதோடு அடிப்படைக்கும் அடிப்படையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டியது: 1. வீணையைத் தூக்க, வைக்க 2. நாதத்தைக் கேட்க, ரஸிக்க 3. ஸ்ருதி சேர்க்க 4. வலது கை விரலின் ஒவ்வொரு மீட்டும், இடது கை விரலின் தேய்ப்பும் (ஜாரு), இழுப்பும் துல்யமாகவும், இனிமையாகவும் இருக்க 5. லயத்தை உடம்போடு இணைக்க 6. எப்படி அப்பியாசம் செய்வது ஆகியவைகளைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.